மட்டக்களப்பு கல்வி வலயத்தின் சுகாதார கழகங்களுக்கு விருது வழங்கும் விழா (புகைப்படம் ,வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார கழகங்களுக்கான விருது வழங்கும் விழா இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி கே.துரைராஜசிங்கம்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், மட்டக்களப்பு மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.நந்தகுமார், ஏறாவூர் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல்,ஆரையம்பதி மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடசாலைகளில் சுகாதாரத்தினை பேணவும் மாணவர்கள் மத்தியில் நல்ல சுகாதார பழக்க வழக்களை மேற்கொள்ளவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கவும் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த சுகாதார கழகம் அமைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்திவருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 56 பாடசாலைகளில் இயங்கிவரும் சுகாதார கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வே இன்று நடைபெற்றது.

தங்க விருதுகளை 15 பாடசாலைகளும் 26 பாடசாலைகள் வெள்ளி விருதினையும் 15பாடசாலைகள் வெண்கல பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டது.


இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் விழிப்பூட்டல் நாடகங்களும் யோக நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.

இதன் அடிப்படையில் சுகாதார கழகத்தில் முதல் இடத்தினை தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலமும் இரண்டாம் இடத்தினை கல்லடி,முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயமும் மூன்றாமிடத்தினை மட்டக்களப்பு புனித தெரேசா மகளிர் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலைகளில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியும் மகாஜனக்கல்லூரியும் ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியுமே தங்க விருதினைப்பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சுகாதார வேலைத்திட்டத்தின் சமூக பங்களிப்பு,பாடசாலை சுகாதார ஆலோசனைக்குழு,மாணவர் சுகாதார கழகம்,தேகாரோக்கிய வேலைத்திட்டம் உட்பட 22 பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பில் மதிப்பீடுகள் செய்யப்பட்டு இந்த விருகள் வழங்கிவைக்கப்பட்டன.