மட்டக்களப்பு தேசிய தொழில்நுட்பட நிறுவனத்தின் மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுக்கு முன்பாக நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தியும் தமது பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியும் மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்பட நிறுவனத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்பட நிறுவனத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் கற்றுவரும் மாணவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தினர்.
சனிக்கிழமை முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தினை மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்பட நிறுவனத்தின் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் நடாத்திவந்த நிலையில் இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கு,உரிமை கோரும் மாணவர்களை தண்டிக்காதே”என்ற தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

மாணவர்கள் தாக்கப்படுவதும் இலவச கல்வியை விற்கப்பதுமா இலங்கை சட்ட யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது,உயர்பட்டப்படிப்பை பணத்திற்கு விற்பதை நிறுத்து,மாணவர்கள் ஒடுக்கப்படுவதை உடனடியாக நிறுத்து,மாணவர்களும் மனிதர்களே எங்களை அடக்கி ஒடுக்குவதை நிறுத்து போன்று சுலோகங்கள் பொருந்திய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதி தேசிய தொழில்நுட்பட நிறுவனத்தின் முன்பாக இருந்து மாணவர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலத்தினை நடாத்தியதுடன் ஊவலத்தினை தொடர்ந்து நிறுவனத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பகுதி நேரம் மற்றும் முழு நேரமாக உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை மேற்கொள்ளும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது அப்பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தாங்கள் பொது நிருவாக அமைச்சின் கவனத்திற்கும் உயர்கல்வி அமைச்சின் கவனத்திற்கும், கொண்டுவருவதாக குறிப்பிட்டனர்.

மேலும், இவ் விடயம் குறித்து எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தனிடம் கதைத்துள்ளதாகவும் அவர் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கதைப்பார் எனவும் இவர்கள் கூறியுள்ளனர்.