பொலிஸாரை தாக்கிய பெண்கள், பிணையில் செல்ல அனுமதி –பொத்துவிலில் சம்பவம்

நீதி மன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட சகோதரர்கள் இருவரையும் கைது செய்யச் சென்ற வேளையில் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கி விட்டு பிடிவிறாந்துக் காரர்களில் ஒருவரைத் தப்பியோடச் செய்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் தலா இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.


பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சகோதரர்களான இருவரையும் தேடிச் சென்று கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சித்த வேளையில் அவர்களது உறவினர்களான பெண்கள் மூவர் சேர்ந்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கி விட்டு பிடிவிறாந்துக் காரர்களில் ஒருவரைத் தப்பியோடச் செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் உதயராஜ் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வெளியேறினார்.

அரச கடமையைச் செய்ய விடாது இடைஞ்சலுண்டாக்கியமை, பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியமை, குற்றவாளிகள் தப்பிச் செல்ல உதவியமை, குற்றவாளிகளுக்கு அபயமளித்தவை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இந்தப் பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.