விபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவனின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்படவுள்ளது

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இறுதியாண்டு பரீட்சை முடிந்த சந்தோசத்தில் உணவருந்திவிட்டு வரும்போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மட்டக்களப்பினை சேர்ந்த பொறியியல் மாணவனின் உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான பெரியகல்லாறுக்கு கொண்டுவரப்படவுள்ளது.


நாளை புதன்கிழமை காலை தொடக்கம் பெரியகல்லாறு,முருகன் ஆலய வீதியில் உள்ள குறித்த மாணவனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயிலும் ஹட்டனை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட நீதிராஜா கரோஜனாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் இவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இறுதியாண்டு பரீட்சை முடிந்த சந்தோசத்தில் குறித்த மாணவரும் அவரது நண்பரும் கடைக்கு சென்று உணவருந்திவிட்டு வரும்போது மோட்டார் சைக்கிள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது யாழ்ப்பாணத்தினை சேர்ந்த மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் கரோஜனாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.