ஆனந்த சங்கரியின் கட்சியுடன் இணைவது எனது தனித்த முடிவு! அழைப்பிற்காக காத்திருக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை, தன்னுடைய தனிப்பட்ட முடிவு என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


மேலும் யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் நான் இவ்வாறு செயற்படவில்லை எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளப் போவதாக, விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அப்படிச் சேர்வதற்காக, தங்களுடைய கதவு எப்பொழுதும் திறந்திருக்கும் எனவும் ஆனந்தசங்கரி ஐயா தெரிவித்திருந்தார்.

இந்த அழைப்பின் அடிப்படையில், 2, 3 கட்டப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம். இந்தப் பேச்சுக்களில் திருப்தியான பதில்கள் கிடைத்திருந்தன.

இருப்பினும், மத்திய குழுவினைக் கூட்டி, அவர்களின் ஆலோசனையினைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது முடிவினை அறிவிப்பதாக, ஆனந்த சங்கரி ஐயா என்னிடம் தெரிவித்திருந்தார்.

இதனை மோப்பம் பிடித்த சிலரினால், இப்பொழுதே நான் கட்சியில் இணைந்துவிட்டேன் என்பது போன்ற செய்தியினை வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது பாரம்பரியம் மிக்க கட்சி. இக்கட்சியினூடாகத்தான் அமிர்தலிங்கமும் எதிர்க்கட்சித் தலைவராகினார்.

ஆனந்தசங்கரி ஐயாவும் தமிழ் மக்களைச் சுரண்டி வாழ நினைப்பவரில்லை. மக்களின் நன்மைக்காகவே குரல்கொடுத்து வந்திருக்கின்றார்.

ஆகையினால்தான், ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் அக்கட்சியுடன் சேர்ந்து செயற்படும் எனது ஆசையினை அறிவித்திருந்தேன்.

இது, தமிழ் மக்களுக்கு எதிரான முடிவில்லை, மாறாக அவர்களைக் காப்பதற்காக எடுக்கப்பட்ட, என்னுடைய தனிப்பட்ட முடிவு என்பதனை, என்னுடைய மக்களுக்கு நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

சிங்களப் பேரினவாதக் கட்சியில் தொற்றிக்கொண்டு வாக்குக் கேட்டு நான் வரமாட்டேன் என்பதைத் தெளிவுறக் கூறியிருக்கிறேன். அதனால்தான் கடந்தமுறை தேர்தலில்கூட நான் போட்டியிடவில்லை.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்காக வாக்குக் கேட்டேன். சிங்களவர் ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாகலாம் என்ற யதார்த்தம் காரணமாகவே அவ்வாறு வாக்குக் கேட்டேன்.

ஆனால், தனிப்பட்ட வாக்குகளுக்காக நான் பேரினவாதக் கட்சிகளில் பயணிக்க மாட்டேன்.

அதனால்தான், தமிழர் பாரம்பரியக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து செயற்படவிரும்பும் என்னுடைய நிலைப்பாட்டினை சங்கரி ஐயாவிடம் தெரிவித்திருந்தேன்.

அவரது முடிவுக்காக இப்பொழுதுவரை காத்திருக்கிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக கூறியுள்ளாரே தவிர, நாங்கள் இன்னும் கூறவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.