முகமூடி நபர்களினால் பெண் தாக்கப்பட்டு கொள்ளை –ஏறாவூரில் சம்பவம்

வீட்டில் பெண் தனியாக இருந்த வேளையில் உட்புகுந்த முகமூடி நபர்கள் பெண்ணைத் தாக்கி காயப்படுத்தி கட்டி வைத்து விட்டு 40 பவுண் தங்க நகைகள், ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதான முறைப்பாடு தமக்குக் கிடைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி மிச்நகர் கிராம வீடொன்றுக்குள் இரண்டு முகமூடித் திருடர்கள் உட்புகுந்துள்ளனர்.

அச்சமயம் அவ்வீட்டுக்காரியான பரீனா மஹ்றூப் (வயது 37) என்பவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டி, தாக்கி காயப்படுத்தி கட்டி வைத்து விட்டு வீட்டிலிருந்த 40 பவுண் தங்க நகைகள், மற்றும் ஒரு தொகைப் பணம் என்பனவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.

தலையில் பலமாகத் தாக்கப்பட்ட பெண் முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எவரும் கைதாகவில்லை