சிறுவர் உரிமைகள் தொடர்பான குறும்படங்களின் தொகுப்பு மற்றும் பாடல் வெளியீட்டு நிகழ்வு

சிறுவர் உரிமைகள் தொடர்பான குறும்படங்களின் தொகுப்பு மற்றும் பாடல் வெளியீட்டு விழா என்பன சனிக்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

வாகரைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வேர்ள்ட் விஷன் வாகரைப் பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வாகரைப் பிரதேச இளைஞர் சம்மேளனம் தயாரித்த “கையெழுத்து”, வாகரை ஆரபி கலாமன்றம் தயாரித்த “துளி” குறும்படம், அன்னை ஆர்ட்ஸ் கிறியேசன்ஸ் தயாரித்த “பாடம” ஆகிய குறும்படங்கள் காட்சிக்கு விடப்பட்டன.

அத்துடன், “இதயம் நினைத்தால்” எனும் சிறுவுர் உரிமைகள் பாடல் வெளியீடும் இடம்பெற்றது.

முன்னதாக சிறுவர் உரிமைகள் தொடர்பான பொதுக் கவனத்தை ஈர்க்கும் வகையில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் செங்கலடிச் சந்தியிலிருந்து படக்காட்சி இடம்பெற்ற செல்லம் பிறீமியர் படமாளிகை வரை விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றது.

குறும்பட இறுவெட்டுக்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் வெளியிட்டு வைத்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், கல்குடா கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீகிருஷ்ணராஜா மற்றும் நிதி அனுசரணையாளர்களான வேர்ள்ட் விஷன் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், சிறுவர் உரிமைகள் தொடர்பான ஆர்வக் குழுக்கள் மற்றும் பிரதேச செயலக மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.