மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழையினால் பல பகுதிகள் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தினால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக உன்னிச்சை மற்றும் உறுகாமம் நீர்பாசன குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக உறுகாம நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் க.அகிலன் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 21 அடி 7 அங்குலமாகவும், உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி 8 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

உறுகாமம் குளம் தற்போது முழுமையாக நிரம்பிக் காணப்படுவதனால் தொடர்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில்; குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலை, குமாரவேலியார் கிராமம், முறகொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று பட்டிப்பளை ,வவுணதீவு,ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்தம் பாதிக்ககூடிய நிலையிருப்பதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.