மட்டக்களப்பு புகையிரத நிலையம் நவீன மயப்படுத்தப்படும் -போக்குவரத்து அமைச்சர் உறுதி

இலங்கையின் மிகப்பழமையான புகையிரத நிலையங்களில் ஒன்றான மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு நேற்று சனிக்கிழமை திடீர் விஜயம் ஒன்றிணை மேற்கொண்ட அமைச்சர் புகையிரத நிலையத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின்போது போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது புகையிரத நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் புகையிர நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியத்துவமிக்க போக்குவரத்து துறையாகவும் கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் போக்குவரத்து துறையாகவும் மட்டக்களப்பு புகையிரத நிலையம் இருந்துவருகின்றது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைதரும் நிலையில் அவர்களுக்கான பிரதான போக்குவரத்து பாதையாகவும் புகையிரத சேவை இருந்துவருகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் கொழும் உட்பட தூர இடங்களுக்கான போக்குவரத்தினை மட்டக்களப்பு புகையிரம் ஊடாகவே மேற்கொண்டுவருகின்றனர்.

மிக நீண்டகாலமாக எதுவித அபிவிருத்தியும் இல்லாத நிலையில் உள்ள மட்டக்களப்பு புகையிர நிலையத்தினை அபிவிருத்தி செய்வதன் தேவை குறித்த அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,இன்று நாடளாவிய ரீதியில் புகையிரத சேவையினை நவீன மயப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அதன் கீழ் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினையும் நவீன மயப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

புகையிரத சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை சிறந்த போக்குவரத்து சேவையாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.