எமது ஆட்சிக்காலத்திலேயே கிழக்கு மாகாணம் தன்னிறைவடைந்துள்ளது –கிழக்கு முதலமைச்சர்

சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள கிழக்கு மாகாணம் எமது ஆட்சிக் காலத்தில் தன்னிறைவடைவதோடு ஏற்றுமதி வலயமாகவும் திகழும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சியும், விற்பனையும் மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றி அவர் மேலும் கூறியதாவது,

இயற்கை விவசாயத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

சகல விதமான வளங்களையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம் பல துறைகளில் முன்னேற்றமடைய வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த மாகாணத்தில் 70 சத வீதமானவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றார்கள்.
இயற்கையோடு இணைந்த விவசாயத்தை நவீனப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் நாம் தன்னிறைவைக் காணலாம்.

இனங்கள் இணைந்த எமது ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணம் தன்னிறைவைக் கண்டு விடும் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கின்றோம்.

அத்தனை உற்பத்தித் துறைகளுக்கும் உரிய ஏற்றுமதி வலயமாக கிழக்கு மாகாணத்தை உருவாக்கிக் காட்டுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

நவீன தொழினுட்பங்கள் அடங்கிய மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழும். அதற்கு தமிழ் முஸ்லிம் சமூக உறவு என்பது பக்கபலமாக அமையும் என்றார்.

மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள விரிவாக்கற் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோக அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன், மாகாணசபை உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, ஆர். துரைரெத்தினம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.