மகிந்த நேரடியாக குத்துவார்,ரணிலும் மைத்திரியும் மறைமுகமாக குத்துவார்கள் - ஜனா

ஜ.நா மனித உரிமைப் பேரவை தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கையில் நீதியான விசாரணை உள்ளக பொறிமுறையின்கீழ் நடக்குமென எமது மக்களோ, நாமோ நம்பவில்லை, நம்பத்தயாராகவுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் பின்னர்கூட நாட்டு நடப்புக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடியதாக இல்லை. குறிப்பாக தமிழர் பிரச்சனை தொடர்பாக மஹிந்த அரசுக்கும் இன்றைய அரசுக்குமிடையே எவ்வித வேறுபாடுகளையும் எம்மால் காணமுடியவில்லை. தமிழர் தரப்பு விடயத்தில் இருதரப்பினரதும் இலக்கும் குறிக்கோளும் ஒன்றே. மஹிந்த நேரடியாக முரண்படுவார், மைத்திரியும், ரணிலும் இணக்கப்பாடுபோல தோற்றம் காட்டி முரண்படுவர். இதுவே இவர்களுக்கிடையேயான வித்தியாசம்.

மஹிந்தவின் குற்றச்செயல்களுக்காகவே மக்கள் ஜனவரி 8, ஆகஸ்ட் 17ந் திகதிகளில் தமது வாக்குரிமை மூலம் தண்டனை வழங்கினர். மக்கள் வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்தி சட்டரீதியான தண்டனை வழங்கவேண்டிய இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் தீர்ப்புக்கு முரணாக இவர்களைப் பாதுகாப்போமென சபதம் செய்கின்றனர்.

ஜ.நா மனித உரிமைப் பேரவை தனது அறிக்கை மூலம் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சம்பவங்களை போர்க்குற்றங்களாகவும், மனிதாபிமானத்திற்கும் சர்வதேச மனித உரிமைகளுக்கும் எதிரான குற்றங்களாக இணங்கண்டு இதனோடு தொடர்புடையவர்களை இச்செயல்களுக்காக பொறுப்புக்கூற வைப்பதுடன் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற வகையில் இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்காது கலப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை சிபார்சு செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசோ இது தொடர்பாக சர்வதேசத்திற்கு ஒரு கதையும், உள்நாட்டுக்கு ஒரு கதையும் கூறுகின்றது.

எமது மக்கள் சர்வதேச விசாரணையை கோரியதின் நோக்கமே இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பின்மீதும் இலங்கையின் விசாரணைப்பொறிமுறைகளின் மீதும் காணப்படும் நம்பிக்கையின்மையேயாகும். இதற்கு கடந்த கால நிகழ்வுகள் மாத்திரமல்ல நிகழ்கால நிகழ்வுகளும் அவ்வாறு உள்ளமையே காரணமாகும். அன்றைய ஆட்சியாளரும், இன்றைய ஆட்சியாளரும் தீர்ப்பை எழுதியபின்னரே விசாரணையை ஆரம்பிக்கின்றார்கள். ஏனெனில் விசாரணைப் பொறிமுறைகள் ஆரம்பிக்கப்பட முன்னரே, குற்றம் இழைத்தவர்களுக்கு குற்றப்பத்திரம் வழங்க முன்னரே, தீர்ப்பை பகிரங்கமாக அறிவித்துவிட்டார்கள். அதாவது பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்தவையோ இறுதிக்கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட படையினரையோ நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம் இவர்களை பாதுகாப்போமென உரத்து முழங்குகின்றார்கள்.

ஜ.நா மனித உரிமைப் பேரவை அறிக்கை இறுதிக்கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட படையினர் மீதும் அவர்களை கட்டளையிட்டு வழிநடத்தியோர்மீதும் பொறுப்பு கூறலுக்காகவும் மனித உரிமை மீறலுக்காகவும் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென சிபார்சு செய்துள்ளது.
அரசு உண்மையில் தான் கூறுவதுபோல பூச்சிய இழப்புக்களுடன் மனிதாபிமான யுத்தத்தை நடத்தி இருந்தால் உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையோ கலப்பு விசாரணை பொறிமுறையோ தேவையில்லை துணிந்து சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுத்து தன்மீது சர்வதேசம் வீண்பழி சுமத்துவதென நிருபிக்க முடியுமாயின் இலங்கை அரசு கூறுவதை நம்பலாம்.

ஆனால் ஸ்ரீலங்கா அரசு இறுதிக்கட்ட யுத்தத்தில் குற்றம் இழைத்ததற்கு ஆதாரபூர்வமான சாட்சிகள் உண்டு. இது தொடர்பாக சர்வதேச விசாரணையோ அல்லது கலப்பு விசாரணையோ நடைபெறுமாக இருந்தால் இறுதிக்கட்ட யுத்தத்தில் கட்டளையிட்டவர்கள் தொடக்கம் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் ஏன் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கூட குற்றவாளிகள் என நிருபிக்கக்கூடிய நிலையே இன்றுள்ளது.

இதனால்தான் சர்வதேச விசாரணையோ, கலப்பு விசாரணையோ இடம்பெற இடமளிக்க முடியாது எனவும் எமது நாட்டின் நீதிப்பொறிமுறை தற்போது சுயாதீனத்துவம் பெற்றுள்ளது எனவே நாமே உள்ளக விசாரணை மூலம் விசாரணை செய்கிறோமென புலம்புகிறது. பத்திரிகையாளர் எக்னெலிகொட அவர்களது விசாரணையின் போது இராணுவத்தரப்பினர் காட்டிய எதிர்வினைகள் மற்றும் கே.பி, எவன்காட் விசாரணைகள் தொடர்பாக சட்டமாதிபர் திணைக்களத்தின் கருத்துக்கள் என்பவற்றிலிருந்து இன்றைய நீதித்துறையினதும், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான நிறுவனங்களது சுயாதீனத்துவத்தை அறிந்துகொள்ள முடியும்.

ஜ.நா மனித உரிமைப் பேரவை அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு தனது உத்தியோகபூர்வமான கருத்தினை வெளியிட முன்னரே இலங்கை இராணுவம் இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனவும் இது தொடர்பாக தனியான அறிக்கை ஒன்றினை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜ.நா மனித உரிமைப் பேரவை அறிக்கையை ஏற்பதோ, மறுப்பதோ அரசு மேற்கொள்ள வேண்டிய தீர்மானம். இதனை மறுப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ தீர்மானம் மேற்கொள்ள இராணுவத்திற்கு எதுவித தார்மீக உரிமையும் இல்லை.

எனவே இந்த நிலமையில் ஜ.நா மனித உரிமைப் பேரவை தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதியான விசாரணை உள்ளக பொறிமுறையின்கீழ் நடக்குமென எமது மக்களோ, நாமோ நம்பவில்லை, நம்பத்தயாருமில்லை இதனை சர்வதேசமும், ஜ.நா மனித உரிமைப் பேரவையும், ஜ.நாவும் நம்புகின்றதா என்பதே எம்முன்னுள்ள பாரிய வினாவாகும்.