கல்முனை நகரில் முஸ்லிம் பிரமுகரின் பெயர் பொறித்த பெயர் படிகத்தை உடைத்தெறிந்த த.தே.கூ.உறுப்பினர்கள்

அம்பாறை , கல்முனை நகரிலுள்ள பொதுச்சந்தை வீதிக்கு எம்.எஸ்.காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் அவ்வீதியின் நினைவுப்படிகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.


கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ்.காரியப்பர் வீதி என பெயரிட்டு நினைவுப்படிகமும் நிர்மானிக்கப்பட்டது.

இந்த நினைவுப்படிகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கவிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாநகரசபை கட்டளைச் சட்டத்தை மீறி இரவோடு இரவாக குறித்த வீதிக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, மாநகர சபை மேயருக்கு எதிராக கல்முனை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்பாட்டத்தின் பின்னரே குறித்த வீதியின் நினைவுப்படிகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிரதேசத்தின் பல பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.