மண்டூர் உற்சவத்தின்போது சட்ட விரோத மதுவிற்பனை செய்தவர்கள் கைது –மதுபோத்தல்களும் மீட்பு

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஆலயத்திற்கு அருகான பகுதியில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனைசெய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


நேற்று சனிக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ஆர்.சம்பத் தலைமையில் ஆலயத்தினை சூழவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விற்பனைசெய்யும் நோக்கில் இவர்கள் மதுபான போத்தல்களை பதுக்கிவைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ஆர்.சம்பத் தெரிவித்தார்.

ஒருவரிடம் இருந்து சுமார் எட்டு போத்தல்கள் மதுபானமும் 10 பியர் டின்களும் மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபரிடம் இருந்து சுமார் ஐந்து போத்தல்கள் மீட்கப்பட்டதாhகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விக்கப்பட்டதுடன் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஆலயத்திற்கு உள்ளும் வெளியிலும் விசேட நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.