தமிழர்களின் பலத்தினை தக்கவைக்கும் கட்சியை மக்கள் இனம்காணவேண்டும் -பா.அரியநேத்திரன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல்வேறுபட்டவர்கள் ஊடுருவியுள்ளனர்.அந்த ஊடுருவலில் இருந்து விலகிச்சென்று எங்களின் அரசியல் பலத்தினை தக்கவைக்கும் கட்சியை மக்கள் இனம் காணவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இங்கு விளையாட்டுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 56வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனைப்போன்றே தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு எமது போராட்டமும் 65வருடத்தினை தாண்டியுள்ளது.விளையாட்டுக்கழகங்கள் வெற்றியீட்டுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.அதேபோன்றுதான் தந்தை செல்வாஒ ரு தரமாவது கோலைப்போட்டி அரசியல் தீர்வினைப்பெறுவோம் என்று எண்ணினார். ஆனால் அவரினால் அந்த விளையாட்டை விளையாடமுடியவில்லை.

அதனைத்தொடர்ந்தே தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்த விளையாட்டை பொறுப்பெடுத்தார்.பல முயற்சிகளை மேற்கொண்டுவெற்றிபெறும் வேளையில் பல சதி நடவடிக்கைகள் அவற்றினை முறியடித்தன.அதற்கு பின்னர் தற்போது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் அந்த பந்தினை எடுத்துள்ளார்.

அந்த பந்தினை நாங்கள் இன்று அணிகளாக விளையாடிக்கொண்டுள்ளோம்.இந்த விளையாட்டு என்பது இலக்கினை அடையும் வரையில் தொடர்ந்துகொண்டிருக்கும்.
65வருடகாலமாக நாங்கள்பட்ட இன்னல்களில் இறுதி இலக்கினை அடையும் வகையிலான ஒரு சந்தர்ப்பமாக நாங்கள் அரசியல் தேர்தல் என்னும் விளையாட்டு ஒன்றினை சந்திக்கவுள்ளோம்.நாங்கள் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
தேசியம் அரசியல் ஊடாக எமது இலக்கினை நோக்கிய தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான தேர்தலாக இதனை நாங்கள் நோக்கவேண்டும்.

இந்த தேர்தல் தொடர்பில் சர்வதேச சமூகம் எங்களை பார்த்துக்கொண்டுள்ளது. வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எவ்வாறு இந்த அரசியல்பலத்தினை வைத்துள்ளார்கள் என்பதை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டுள்ளது.அந்த அரசியல்பலம் ஊடாக அவர்களின் இலக்கு எவ்வாறு செல்லும் என்பதையும் அவதானித்துக்கொண்டே உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமானவர்களாக தமிழர்கள் வாழ்ந்துவருகின்றோம்.அதற்கு அடுத்த இனமாக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இந்த விகிதாசார தேர்தல்முறையானது எந்த கட்சி அதிக வாக்குகளை பெறுகின்றதோ அந்த கட்சியே பாராளுமன்றம் செல்லும் தகுதியை பெறும்.

யாழ்மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் 99வீதமானவர்கள் தமிழர்களாக உள்ளனர்.அங்கு இன்னுமொருகட்சி வாக்குகளை பிரித்தாலும் அங்கு தெரிவுசெய்யப்படுவோர் தமிழர்களாகவே இருப்பார்கள்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது வாக்குகளை சிதறடிக்கும் கட்சிகளுக்கு பின்னால் செல்வோமானால் தமிழ் தேசியத்தின் பலம் என்பது இல்லாமல்போய்விடும்.
2004ஆம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்ற நாங்கள் 2010ஆம்ஆண்டு 14 பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்தது தொடர்பில் நாங்கள் கவனத்தில்கொள்ளவேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல்வேறுபட்டவர்கள் ஊடுருவியுள்ளனர்.அந்த ஊடுருவலில் இருந்து விலகிச்சென்று எங்களின் அரசியல் பலத்தினை தக்கவைக்கும் கட்சியை மக்கள் இனம் காணவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது பணியை திறமையாக ஆற்றிவருகின்றது.நாங்கள் எட்டு வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுத்தவுள்ளோம்.அந்த எட்டு வேட்பாளரையும் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அவர்கள் நீங்கள் நினைக்கும் தகுதியில் இல்லையென்றாலும் அந்த கட்சிக்காவது நீங்கள் உங்கள் வாக்கை செலுத்துங்கள்.

அரியநேத்திரனை பிடிக்கவில்லையென்பதற்காக கட்சியை விட்டு விலகவேண்டாம்.கட்சியை நாங்கள் வெறுப்போமானால் எமது தாயை வெறுப்பதற்கு சமனாகும்.இதனை மனதில் பதித்து எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலமடையச்செய்யவேண்டியது இளைஞர்களின் கடமையாகும்.

இதன்மூலம் எதிர்வரும் அரசாங்கத்துடன் பேரம்பேசும் சக்தியாக மாற்றம்பெற்று அடுத்தக்கட்ட அரசிலை நடாத்துவதன் மூலமாக எதிர்கால இலட்சியங்களை அடையமுடியும்.