அம்பாறை மாவட்ட வேட்பாளர் தெரிவும் பூர்த்தி -இன்று வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிகவும் இழுபறி நிலையில் இருந்த அம்பாறை மாவட்டத்திற்கான வேட்பாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பு மனுக்கல் அனைத்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை அம்பாறை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையே இருந்துவந்து.

தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட சிக்கல் நிலையே இந்த தாமத்துக்கும் இழுபறிக்கும் காரணமாக அமைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் வரையான காலப்பகுதிக்குள் வேட்பாளர் தெரிவுகள் பூர்த்திசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கையொப்பம் இடும் பணிகள் நடைபெற்றன.

இதன் அடிப்படையில் ஹென்றி மகேந்திரன் தலைமையில் பெண் உறுப்பினர் உட்பட பத்து பேர் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி ஹென்றி மகேந்திரன்(தலைமை வேட்பாளர்) சந்திரநேரு சந்திரகாந்தன், குணசேகரம் சங்கர்,சி.ஜெகநாதன்,த.கலையரசன்,அன்னம்மா கோவிந்தபிள்ளை ,யோகரெத்தினம் கோபிகாந்த்,வைரமுத்து அருளம்பலம்,முருகேசு நடேசலிங்கம்,ரொபின் கோடீஸ்வரன் ஆகியோர் வேட்பு மனுக்கலில் இன்று கையொப்பம் இட்டனர்.