சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பறித்தெடுக்கின்ற முனைப்பே மகிந்தவின் வருகை -அமீரலி

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்துவிட்டு மீண்டும் அந்த அரசியலுக்கு வந்து பாராளுமன்ற கதிரையில் அமர்ந்து மீண்டும் கபளீகரம் செய்வதற்கு நாட்டை கொள்ளையடிப்பதற்கு சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பறித்தெடுக்கின்ற வேலைத்திட்டத்தின் முனைப்பே மகிந்தவின் மீள்வருகை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய தேசிய கட்சி இன்று ஒரு பலம் வாய்ந்த கட்சியாக இருக்கின்றது.இம்முறை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சாரைசாரையாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

ஏங்களுடைய எதிர்பார்ப்பு இந்த மாவட்டத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து சமூக ஒற்றுமையுடன் செயற்படக்கூடிய ஒரு அணியினரை ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையுடன் களம் இறக்கியுள்ளது.

இதில் இன,மதபேதம் இல்லாமல் இணைந்து செயற்படக்கூடிய நிலையை நாங்கள் இங்கு காணக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப்பெற்று இன ஒற்றுமையின் பாலமாக மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்திற்கும் வித்திடும் முதன்மை தேர்தலாகவும் இந்த நல்லாட்சியில் நாங்கள் செயற்படவுள்ளோம்.

இன்று மைத்திரிபால சிறிசேன அணியில் மகிந்த ராஜபக்ஸ இணைந்திருப்பதன் காரணமாக சிறுபான்மை சமூகம் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.மட்டக்களப்பு மாவட்;டத்தில் ஐக்கிய தேசிய கட்சி முதன்மையாகஇருக்கும். மகிந்தராஜபக்ஸ கட்சியில் இருக்கும் யாரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெறமுடியாது.எந்த சிறுபான்மை சமூகமும் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

யாரும் அரசியலுக்கு வரலாம் போகலாம்.ஆனால் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்துவிட்டு மீண்டும் அந்த அரசியலுக்கு வந்து பாராளுமன்ற கதிரையில் அமர்ந்து மீண்டும் கபளீகரம் செய்வதற்கு நாட்டை கொள்ளையடிப்பதற்கு சிறுபான்மை சமூகத்தின் உரிமையை பறித்தெடுக்கின்ற வேலைத்திட்டத்தின் முனைப்பே மகிந்தவின் மீள்வருகையை பார்க்கின்றேன்.