கிழக்கு மக்களின் அபிலாசைகள் நிறைவேறுமா? – மக்களின் அபிலாசைகளுக்கு செவிசாய்ப்பார்களா தலைவர்கள்? (கட்டுரை)

ஏழாவது பாராளுமன்ற தேர்தல் தமிழர் தரப்பினருக்கு சவாலானது எனில் அதில் ஐயமில்லை. எனினும் உலகிலேயே கிழக்கில் உள்ள தமிழர்கள் மாத்திரமே எதுவித பிரதிபலனும்; இல்லாத அரச தலைவர்களை துரதிஸ்ட்டவசமாக தெரிவு செய்து வந்துள்ளனர் என்பது இன்று உணரப்பட்டுள்ளது. அதன் பலாபலனாக கல்வி, பொருளாதாரம், கலாசாரம் மற்றும் அரசியல் அபிலாசைகள் எமது பிரதேசத்தில் மிக மிக பின்னடைவை கொண்டுவந்துள்ளது.


அடிப்படை அறிவை மாத்திரம் அதிகமாகக் கொண்டிருக்கும் கிழக்கிலங்கை கிராமப்புற மக்களின் நிலைமையினை நன்கு பயன்படுத்தி உணர்ச்சியூட்டும் வீரவசனங்களை இறக்குமதி செய்தவர்களைக் கொண்டு மேடைகளில் பேசி, வாக்குகளை வக்கத்தவர்கள் பெற்றுவந்தமைதான் கடந்த கால கசப்பான வரலாறு.

இங்கு கல்வியில் மிகப் பின்தங்கியவர்கள், கட்சியின்பின் தங்கியவர்கள் என மக்களது அபிலாசைகளை புறக்கணித்த கட்சித்தெரிவுகளாக இருந்துவந்த கசப்பான கதைகளை இன்று அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அதனால்தான் மட்டக்களப்பில் கூட்டாக வந்த கூட்டமைப்பினர் சென்றமுறை பேசியபோது 'இங்கு எமது சின்னத்தில் நாங்கள் நாயை போட்டியிட வைத்தாலும் அதை வெல்லவைப்போம்' என எம்மை மடையர்களென சிலர் குத்திப்பேசியது நம்மில் எத்தனைபேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை.

அப்படி விசுவாசமான மக்களது அபிலாசைகளை எப்போதாவது காதில் போட்டதுண்டா பெரியவர்களே! மக்களின் தேர்தலாக இதைமாற்றுவதற்க்கு முன், மக்களின் விருப்புக்கு மதிப்பளித்து அவர்கள் முன்னிறுத்தும் போட்டியாளர்களுக்கு முக்கியம் கொடுங்கள்.

சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுகவேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
நாங்கள் தமிழர்களது ஒரே கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பையே ஆதரிக்க விரும்புகின்றோம். அவர்களது தேசியக்கொள்ளைதான் எமது கொள்கையும் சந்தேகமில்லை.

இருப்பினும் நன்றாக சிந்தியுங்கள்! வடக்கில் வைக்கீல்களும், வைத்தியர்களும், நிபுணர்களும் நேர்மையானவர்களும் மக்கள் ஆணைக்கேற்ப்ப மன்றில் நிறுத்திவிட்டு கிழக்கில் மட்டும் விளக்கமில்லாதவர்களை நிறுத்தி மக்கள் தெரிவுக்கு மதிப்புக்கொடுக்காததுதான் எங்களுக்கு கவலை.

முதலில் மட்டக்களப்பில் முன்னிருந்த மூவரையும் பின்னிறுத்துங்கள் அதன்பின் நன்கு படித்த, சமுகத்தில் ஆர்வமுள்ள சுறுசுறுப்பான நேர்மையான கட்சி சார்பு, புதியவர்களை மக்களின் அபிலாசைக்கு ஏற்ப்ப முன்னிறுத்துங்கள். அப்போது இந்தக் கட்சியை, அதன் பேரம் பேசும் தேசியபலத்தை யாராலும் அசைக்க முடியாது கிழக்கில்.

முன்னுள்ள மூவரையும் ஆலோசகர்களாக அனுமதியுங்கள் அவர்களது அனுபவம் இந்த முற்போக்கான இளம் சிங்கங்களுக்கு உரமாககவும் வரமாகவும் இருக்கும் அது எதிரியின் திட்டத்தை பொடிப்பொடியாய் கருக்கும்.

நாங்கள் இங்கு இணையத்தளங்கள், சமுக வலைத்தளங்கள் மூலமாகப் பகிர்ந்துகொள்ளும் விடயங்கள் எல்லாமே விசமத்தனமானதோ, செயலூக்கமற்றதோ கிடையாது. சமூகப் பொறுப்புள்ளவர்கள்தான் சமுக வலைத்தளங்களை இயக்குகின்றனர். அப்படியாயின் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய அதிபர் மோடி ஏன் நமது இலங்கை அதிபர் மைத்திரி இவர்களது வெற்றிக்கு பின்னால் எல்லாம் இந்த சமுக வலைத்தளங்களின் பங்கு மிக மிக முக்கியமாக இருந்ததை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

இன்று இலங்கையில் 100க்கு 80 விகிதமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அவற்றை பயன்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கின்றது. இவ்வாறான கருத்துப்பகிர்வில் நியாயம் இருந்தால் அனைவரும் ஏற்றுக்கொண்டே தீருவார்கள். இவற்றின் விளைவுகளை சாதாரணமாக எடைபோடமுடியாது.

நாம் பாராளுமன்ற பார்வையாளர்களாக எமது பிரதிநிதிகளை அனுப்ப விரும்பவில்லை, அவர்களை எமது மக்களின் அபிலாசைகளை எல்லாவகையிலும் பூர்த்திசெய்யக்கூடிய பங்காளிகளாகவே பார்க்க விரும்புகிறோம்.

மாற்றுக்கட்சிகளிடம் வாக்கை பறிகொடுக்கும் இக்கட்டுக்குள் மக்களை மாற்றி "கிழக்கான் சதி செய்துவிட்டான்" எனப் பழியைப்போட்டு போட்டு எம்மை வீணாக குறை கூறவேண்டாம். மாறாக போட்டியாளர் தெரிவில் மக்களின் அபிலாசைக்கு முன்னுரிமைகொடுங்கள் ஐயா!

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத்து செல்லும் போட்டியாளர்கள் நமக்கு தேவை.

கட்சிக்குள் காக்கைபிடிக்காத, ஏற்கனவே போட்டியிட்டு தோல்லியைத் தழுவாத மக்கள் செல்வாக்குள்ள மூவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பதிலாக களமிறக்குமாறு உங்களை மன்றாடி வேண்டுகின்றோம்.

இதில்தான் எமது கிழக்கு மானம் அடங்கி இருக்கிறது. இந்த பொதுமக்கள் சார்பாக எழுந்திருக்கும் அதிர்வலைக்கு செவிசாய்ப்பீர்கள் என நம்புகின்றோம். இல்லை எனில் அதன் பின்விளைவுகளுக்கு கிழக்கு மக்களை ஒருபோதும் குறைகூறும் அருகதை எவருக்கும் இருக்கக்கூடாது.

-கிழக்கிலங்கை முன்னேற்ற கழகம்-