கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரின் தயாரிப்பில் உருவான அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து அரங்கேற்றவிழா

கூத்தரங்கு வாழ்தலுக்கும் கொண்டாடி மகிழ்தலுக்கும், சமுதாய இணைவிற்கும் உரியது. இது எமது முன்னோர் கண்டு பிடித்த சிறந்த கலை வெளிப்பாடாகும்.  கூத்தரங்கு அதன் தொடர்செயற்பாட்டின் மூலம் சமுதாயத்தை இயல்பாக இணைக்க வல்லது.  இது ஊருக்குள் இன்றும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளரும் இணைந்து கடந்த ஐந்து மாதகாலமாக கூத்தரங்கின் இயல்பான களத்து வெளியில் செய்முறை ரீதியான கற்றல் - கற்பித்தலில் ஈடுபட்டு உருவானதே அலங்காரரூபன் நாடகம் தென்மோடிக் கூத்தாகும். கூத்தரங்கு பற்றி எந்தத் தெளிவும் இல்லாத மாணவர்களே இக்கூத்தைத் திறமையுடன் அதன் வெளியில் (களரியில்) நின்று ஆடிப் பழகியுள்ளனர்.

நாளை 21.07.2015 அன்று (செவ்வாயக் கிழமை) இரவு 7.00 மணிக்கு பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகில் வட்டக் களரி அமைத்து இடம்பெறவுள்ளது. இக்கூத்தைச் சரியான முறையில் கற்றுத் தேர்ந்த மாணவர்களின் திறன், ஆற்றல்களின் கொண்டாடுதலாகவும் இவ்வரங்கேற்ற விழா அமைகின்றது. பெண்கள் ஆண் பாத்திரங்களைத் (கூத்தைத்) தாங்கி ஆடும் நிபுணத்துவங்களையும் வல்லபங்களையும் இவ்விழா கொண்டமை சிறப்பம்சமாகும். சில மாணவர்களின் முதல் அரங்கேற்ற விழாவாக இக் கூத்து அமைகின்றது.

இக்கூத்தின் அண்ணாவியாராக வே.தம்பிமுத்து அவர்களும் உதவியாக கண்ணகி முத்தமிழ் மன்ற உறுப்பினர்களான கு.பிரபாகரன், சி.கேதீஸ்வரன், வி.கோடீஸ்வரன் அவர்களும் செயற்படுகின்றனர்.

இக்கூத்துருவாக்கத்திற்கான பொறுப்பாசிரியராக நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் செயற்பட்டார். அவரும் இக்கூத்தில் அலங்காரரூபனுக்கு ஆடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வி.இன்பமோகன் அவர்களும், முதுநிலை விரிவுரையாளரும் சமுதாயமைய அரங்கச் செயற்பாட்டாளருமான கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் வழிகாட்டி ஒத்துழைப்பை வழங்கியவர்களாவர்.

இது பல்கலைக்கழக சமூகத்திற்காகப் பழக்கி அரங்கேற்றப்படுகின்றது. இவ்விழா இச்சமூகம் ஓய்வெடுத்து நிம்மதி அடைந்து மகிழ்ந்து ஊடாட்டம் கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமையும் என நுண்கலைத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இக்கூத்தின் கொண்டாட்ட விழாவிற்கு நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வி.இன்பமோகன் தலைமை வகிக்கின்றார்.

பிரதம அதிதியாக கலைகலாசார பீடாதிபதி கே.இராஜேந்திரம் அவர்களும், சிறப்பு அதிதியாக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நெறி நிறுவகப் பதில் பணிப்பாளர் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக பதில் பதிவாளர் திரு. அ.பகிரதன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்விற்கான தொடக்கவுரையையும் எண்ணக்கரு விளக்கவுரையையும் நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களும் நன்றியுரையை நுண்கலைத்துறையின் விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் அவர்களும் ஆற்றுகின்றனர்.

இக்கூத்திற்கான உடை ஒப்பனைகளைச் செய்பவர்கள் ஓவியர்களான திரு சு.நிர்மலவாசன், ஈ.குலராஜ் அவர்களும் வருகைதரு விரிவுரையாளர் ப.ராஜதிலகன் அவர்களும் மேற்கொள்கின்றனர். அத்தோடு, சுவாமி அழகியற் கற்கை நிறுவக நாடகமும் அரங்கியல் விரிவுரையாளர் திரு.த.விவேகானந்தராஜா அவர்கள் ஓழுங்கமைப்பு வேலைகளிலும் ஈடுபடுகின்றார். இவ்விழாவிற்கு கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்தினரும் பல வழிகளில் உதவுகின்றனர்.

அத்தோடு, ப.கதிர்காமநாதன் அண்ணாவியாரும் பாட்டு ஆட்டங்களைத் தெளிவுபடுத்த உதவியுள்ளார். இவ்விழாவிற்கு நுண்கலைத்துறையினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.