மட்டக்களப்பு நகரில் உணவு விடுதிகள் திடீர் சோதனை – ஆறு விடுதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவு விடுதிகள் இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

உணவு விடுதிகளில் காலையில் விற்பனைசெய்யப்படும் உணவுகளின் தரம் தொடர்பில் பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்டுவரும் முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நகரின் கோட்டைமுனை மற்றும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு சுகாதார பணிப்பாளர் பணியின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கா.ஜெயரஞ்சனின் வழிகாட்டலில் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் மற்றும் கோட்டைமுனை பொதுச்சுகாதார பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.சகாயதேவராஜா ஆகியோரின் தலைமையில் சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

பழைய உணவுப்பொருட்களை குளிரூட்டியில் வைத்து சூடாக்கிய பின்னர் மீண்டும் காலைவேளையில் சில உணவு விடுதிகள் விற்பனை செய்துவருவது இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

இதன்போது கோட்டைமுனை பகுதியில் இரண்டு உணவு விடுதிகளுக்கும் வெட்டுக்காடு பகுதியில் நான்கு உணவு விடுதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

காலை வேளையில் பாடசாலை செல்லும் மாணவர்களும் அலுவலகம் செல்வோரும் உணவுகளை அதிகளவில் பெற்றுச்செல்லும் நிலையில் அவர்கள் சிறந்த உணவுகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு சுகாதார பணிப்பாளர் பணியின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கா.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

தொடர்ச்சியான இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.