நாங்கள் நிஜத் துப்பாக்கியுடன் தமிழர் உரிமைக்காக களத்திலே போராடியவர்கள் - பிள்ளையான்

போராடுவோம் என்று காகித மட்டையில் துப்பாக்கி செய்து கூச்சலிடுகிறவர்களல்ல நாங்கள். நாங்கள் நிஜத் துப்பாக்கியுடன் தமிழர் உரிமைக்காக தனித்து நின்று களத்திலே போராடியவர்கள்.நிஜத்துக்கும் நிழலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது இவ்வாறு கிழக்கு மகாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மேதினக் கூட்டத்தில் தெரிவித்தார்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீஎம்விபி) கட்சியினர் ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் மட்டக்களப்பு – முறக்கொட்டான்சேனையில் உள்ள ஞான ஒளி விளையாட்டுத் திடலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய சந்திரகாந்தன் கூறியதாவது,

நாங்கள் களத்திலே நின்று போராடியதால்தான் சிறந்த ஆளுமையும் வீரம் நிறைந்த பண்புகளும் கிழக்கு மாகாணத்திலே தனித்து நின்று ஆட்சியமைத்து அதிகாரக் கட்டமைப்பைப் கொஞ்சமேனும் பலப்படுத்த வழி செய்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிறைவேற்றுக் குழுவிலே இருக்கின்றார்.
மட்டக்களப்பிலே 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விதவைகளாக்கப்பட்டு, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கவீனர்களாகவும் உள்ளார்கள். இவர்களுக்கான என்ன புனர்வாழ்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்கள்.? கிழக்கு மகாணத்தைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திப்பதே கிடையாது.

வெறுமனே யாழ்ப்hணத்திலுள்ள படை முகாம்கள் மாத்திரம் அகற்றப்படவேண்டுமென்பதுதான் அவர்களது அரசியல் நகர்வுக்கான அக்கறை.
தமிழர்களுக்காக நாங்கள் கட்டியெழுப்பிய சமூகக் கட்டமைப்பு, அதிகாரம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து ஒரு பலவீனமான நிலைமைக்குக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்.

இவர்களை இன்னமும் இந்த மண்ணில் கால் பதிக்க விடாமல் துரத்தியடிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகள் நமக்கு முன்னால் விரிந்து கிடக்கின்றது.

விவசாயிகளுக்கு மானியம், இழப்புக்கள் ஏற்பட்டால் நஷ்ட ஈடு பெறுவதிலே, விறகு வெட்ட காட்டுக்குச் சென்றால் அங்கே பிரச்சினை இருக்கின்றது, பிரம்பு வெட்டச் சென்றால் அதிலும் சிக்கல், மாடுகள் மேய்க்கச் சென்றால் மேய்ச்சல் தரையிலே பிரச்சினை இருக்கின்றது, இவற்றையும் விட அந்தந்தத் தொழில் செய்கின்ற சமூகங்களுக்கிடையிலே உள்ள சமூகப் பிரச்சினைகள் மிக அதிகமாக இருக்கின்றது.

ஏழைத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடி நீர், கிணறு, மலசலகூட வசதி, காணி, பாடசாலை செல்லும் பிள்ளைக்கு சப்பாத்து, புத்தகப்பை, கொப்பி இல்லை, வாழ்வாதாரப் பிரச்சினை, மீனவர் விவசாயிகள், மணல் அகழ்பவர்கள், இவ்வாறு உழைத்துக் களைத்துப் போயுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நிலுவையிலுள்ளது.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நாம்தான் வலுவான சக்திகளாக எழுந்து நிற்க வேண்டும்.

இப்படியான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டாமல் இனத்துவேஷம் மட்டும்தான் தங்களுடைய அரசியல் பணி என்று கருதி செயற்பட்டு வருவதால் எங்களது சமூகப் பிரச்சினைகள் அப்படியே அமிழ்ந்து கிடக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலே உழைக்கும் வர்க்கம் வட்டித் தொல்லையால் மரணத்தையும் இன்னும் பல நெருக்கடிகளையும் எதிர்நோக்கி நிற்கின்றது.
2008 ஆம் ஆண்டு பலருக்கு மறந்தே போயிருக்கும். அது மிகப்பெரிய நெருக்கடியான காலம்.

எங்கு திரும்பிப் பார்த்தாலும் சடலங்களும் மரண ஓலங்களும்.
ஒன்றும் செய்ய முடியாத நெருக்கடியான காலகட்டத்திலே நாங்கள் ஒரு ஜனநாயகப் பிரவேசத்தை மேற்கொண்டோம்.

அந்த ஜனநாயகப் பிரவேசம்தான் கிழக்கு மாகாணத்திலே ஒரு சடுதியான ஜனநாயக மாற்றத்தைக் கொண்டு வந்தது.

அதன் மூலமாக எம்மைச் சூழ்ந்திருந்த நெருக்கடிகள் அகற்றப்பட்டன.
இப்பொழுதுதான் வடபகுதியிலே படை முகாம்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கிறன. ஆனால், நாம் ஜனநாயக வழிக்கு வந்த 2008 ஆம் ஆண்டிலேயே கிழக்கு மாகாணத்திலிருந்து படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட்டு விட்டன.

அப்பொழுதிருந்தே கல்விச் சாலைகள் உருவாக வழிவகுத்தது. ஹர்த்தால் கடையடைப்புக்கள் இடம்பெற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
மிக முக்கியமாக தமிழர்களுக்கான அரசியல் ஆட்சியதிகார முறைமை ஒன்றுக்கு நாம்தான் வித்திட்டோம்.

20 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாண சபை என்கின்ற அதிகார அரசியல் முறைமையை நாம்தான் தூசு தட்டி ஏற்படுத்தினோம்.
இப்பொழுது தமிழ் பேசும் மக்களுடைய தலைவர் என்று சொல்கின்றவர்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இணக்கப்பாட்டு அரசியல் இதுதான் என்று காட்டிய முன்னோடிகள் நாம்தான்.

நல்லாட்சி என்கின்ற போர்வையிலே வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மாகாண சபையிலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள்.
நாடாளுமன்றத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காரர்கள் கதிரைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றபோது இப்பொழுது கிழக்கு மாகாணத்தின் நிலைமையை சற்று உற்றுக் கவனித்துப் பாருங்கள்.

செல்லாக் காசாக இருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கல்வி அமைச்சரால் ஒரு சுற்று நிருபத்தை தமிழில் வெளியிட முடிகின்றதா? அதுபோகட்டும் என்றால் அதனை வலுவாக எதிர்த்துக் குரலெழுப்பத்தான் முடிகிறதா?

கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருக்கு ஒரு துடைப்பம் வாங்கி கட்டிடத்தைத் தூசு தட்டக் காசு இல்லை.
விவசாய அமைச்சருக்கு ஒரு சிறு குளத்தையாவது கட்ட முடியாத நிலை. இதுதான் இன்று கிழக்கு மாகாணத்திலே உள்ள நிலைமை.

நாங்கள் ஆட்சியிலிருக்கும் போது சாதித்தவைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்கு வேறு யாரும் சாட்சி சொல்லத் தேவையில்லை. எங்களால் நிறைவேற்றப்பட்ட வேலைகளே அதற்குத் தகுந்த சான்று.

மட்டக்களப்பிலே 75 சத வீதமான தமிழர்கள் வாழ்கின்றபொழது ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் அபிவிருத்திக்குத் தலைவராக உள்ளார்.
ஏறாவூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக இருப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் இன்றைய நிலைமை.

நாங்கள் ஆட்சியிலே இருந்த பொழுது சிங்களவர்களுக்குப் பின்னால் இருந்து வால் பிடிக்கின்றோம் என்று விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுது முஸ்லிம்களுக்குப் பின்னால் இருந்து வால் பிடிக்கும் நிலைமையை என்னவென்று சொல்வது?

மஹிந்தவின் காலத்திலே மேய்ச்சல் தரைப் பிரச்சினையைத் தீர்க்க முடியால் போய் விட்டது என்று எங்களைக் கிண்டலடித்தார்கள். அப்படியாயின் இப்பொழுது மைத்திரியின் காலத்தில் உங்களால் அதனைத் தீர்க்க முடியுமா?

எனக்கு நினைவிருக்கின்றது, ரணில் விக்கிரமசிங்ஹ மட்டக்களப்புக்கு வந்தபோது சொன்னார்; வரப்போகின்ற ஜனாதிபதி மைத்திரி மட்டக்களப்புக்கு அடுத்த மாவட்டத்தில் உள்ளவர். நீங்கள் போகும் வழியிலேயே அவரிடம் சென்று உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்று சொன்னார். நான் சவால் விடுகின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஜனாதிபதியின் சொந்த ஊரான மட்டக்களப்புக்கு அடுத்துள்ள பொலான்னறுவைக்குப் சென்று ஜனாதிபதியிடம் சொல்லி மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் பார்க்கலாம்”.