வாழைச்சேனையில் முதலீட்டு நிறுவன உரிமையாளரால் கடுமையாக தாக்கப்பட்ட இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் அங்கு கடமையாற்றும் தமிழ் இளைஞர் ஒருவரை துப்பாக்கிமுனையில் கடுமையாக தாக்கியநிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச பொலிஸ் அத்தியட்சரின் கவனத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கொண்டுவந்துள்ளார்.


நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11மணியளவில் வாழைச்சேனை கோல்டன் வீதியில் உள்ள முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளரும் அவரின் பாதுகாப்பு ஊழியர்களும் இணைந்தே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,

உழைக்கும் வர்க்கத்தினரை கௌரவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மேதினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் ஊழியர் ஒருவர் இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டுள்ளதானது ஒரு மிலேச்சத்தனமான செயலாகும்.

குறித்த முதலீட்டு நிறுவனத்தில் 15 ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் அவர்களில் 10பேர் தமிழ் இளைஞர்கள் என்பதுடன் நான்கு பேர் சிங்கள இளைஞர்களும் ஒரு முஸ்லிம் இளைஞரும் கடமையாற்றிவருகின்றனர்.

குறித்த நிறுவனமானது விடுமுறை வழங்காமல் தொடர்ச்சியாக வேலைவாங்கிவருவருவதன் காரணமாக அதில் இருந்து விலகிச்செல்வதற்கு கல்லடியை சேர்ந்த டைசோ டில்மா என்ற இளைஞன் அனுமதிகேட்டுள்ளார்.
இந்தவேளையில் வெள்ளிக்கிழமை மாலை ஒன்றுகூடல் ஒன்றுக்குவருமாறு குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 11.00மணியளவிலேயே குறித்த ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளதுடன் அந்த வேளையில் குறித்த முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் காசை கொள்ளையடித்தா செல்லப்பார்க்கின்றாய் என்றுகூறி இளைஞன் மீது ஹொக்கி விளையாடும் பொல்லுகளினால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் முன்னிலையில் கைத்துப்பாக்கியுடன் குறித்த இளைஞன் மீது உரிமையாளர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் நான்கு பேர் இணைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சத்தம் வெளியில் கேட்காதவாறு அறைகளை மூடிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன் கழிவறைக்குள் கொண்டுசென்றும் கடுமையாக தாக்கியுள்ளனர்.இந்தவேளையில் உரிமையாளரின் கைகளில் துப்பாக்கி இருந்ததன் காரணமாக குறித்த நேரத்தில் ஏனைய ஊழியர்கள் இதனை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.

கடுமையாக தாக்கியபின்னர் குறித்த ஊழியரை வீதியில் வீசியுள்ள நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச்சென்று அருகில் உள்ள வீடொன்றிற்குள் ஒளிந்திருந்துள்ளார்.இந்தவேளையில் அதிகாலையில் ஏனைய ஊழியர்கள் குறித்த ஊழியரை தேடி மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் எனது கவனத்துக்கு குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் கொண்டுவந்தனர்.இது தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்று தாக்கப்பட்ட ஊழியரை பார்வையிட்டு அங்கு நடந்தவை தொடர்பில் கேட்டறிந்துகொண்டேன்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கும் அறிவித்துள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொலிஸாரும் வாக்குமூலம் பதிவுசெய்து வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளேன்.

வாழைச்சேனையில் உள்ள குறித்த முதலீட்டு நிறுவனம் ஒரு பதிவுசெய்யப்படாத நிறுவனம் ஆகும்.அத்துடன் அதன் உரிமையாளர் துப்பாக்கியும் வைத்துள்ளார்.அந்த துப்பாக்கி அவரிடம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணை நடாத்தவேண்டும் என பொலிஸாhரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதேபோன்று குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு வாழைச்சேனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சரிடமும் கோரியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.