இராணமடு பகுதியில் சட்ட விரோதமாக மண் ஏற்றிய இருவர் கைது –உழவு இயந்திரங்களும் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணமடு பகுதியில் உள்ள ஆற்றில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக மண் ஏற்றிய இரண்டு பேரை கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த காலத்தில் மண் அனுமதிப்பத்திரம் உள்ளவர்களும் அனுமதிப்பத்திரம் அற்றவர்களும் சட்டத்துக்கு முரணாக மண் அகழ்வில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கபடும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ரஞ்சித் சம்பத் தலைமையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் இன்று அதிகாலை அனுமதிப்பத்திரம் இருந்தும் சட்டத்திற்கு முரணான வகையில் மண் அகழ்ந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரகள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று இப்பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமையும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.