தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக இயங்ககூடாது –பொன்.செல்வராசா எம்.பி.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அரசியல்வாதிகளின் நிறுவனமாக செல்லாமல் இளைஞர்களின் முன்னேற்றம் நோக்கிய பாதையில் செல்லவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.


கனவு காண்பதற்கல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ், இளைஞர்கழகங்களை வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 430 இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன் பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், பொறியியலாளர் சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் கனவு காண்பதற்கல்ல வழியைக் காட்டுவதற்கு எனும் தொனிப் பொருளில் நாடுபூராவும் இவ்வேலைத்திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில்; வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி ஆகிய இடங்களில் இந்நிகழ்வு நடைபெற்றன.

இதன்போது இளைஞர் பயிற்சி காட்சிக் கூடங்கள் மற்றும் தொழில் வழிகாட்டல் காட்சி கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் இளைஞர் கழக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
கடந்த காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக கடந்த அரசாங்கத்தினால் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.

அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட பணங்கள் இளைஞர்களின் நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்படாமல் தமது அரசியல்நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது.

இன்று இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மேற்கொள்ளும் என நம்புகின்றோம்.

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒரு செயலிழந்த நிலையிலேயே இருந்துவந்தது.இது தொடர்பில் பாராளுமன்றில் குரல்கொடுக்கப்பட்டுவந்துள்ளன.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நிகழ்வுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காத நிலையே கடந்த கால ஆட்சியில் இருந்துவந்தது.இன்று அந்த நிலைமை மாறியுள்ளது என்றார்.