நகர்ப்பகுதிகளிலும் யுத்த வலியை வேதனையை சுமந்த மக்கள் வாழ்கின்றனர் - அதிபர் சங்கத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம்

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கியே அனைத்து உதவிகளும் செல்கின்றது.ஆனால் வலியும் வேதனையும் சுமந்த மக்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளனர் என மட்டக்களப்பு வலய அதிபர் சங்கத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 05 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கையேடு வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இலண்டனை சேர்ந்த லெடர் மற்றும் ஆர்.பி.ரி.எஸ்.உதவும் அமைப்புகளின் அனுசரணையில் இந்த கான பரீட்சை வழிகாட்டல் கையேடு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு வலய அதிபர் சங்கத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் லெடர் மற்றும் ஆர்.பி.ரி.எஸ்.உதவும் அமைப்புகளின் உதவி பணிப்பாளர் என்.சிவதாஸ்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளா கே.பாஸ்கரன்,உதவி பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக 400 கையேடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அதிபர் சங்கத்தின் தலைவர் எஸ்.அருளானந்தம்,

தானங்களில் சிறந்த தானமாக கல்வித்தானம் உள்ளதாக பாரதியார் அழகாக கூறியுள்ளார்.நாங்கள் செய்யும் புண்ணியங்களில் மிக முக்கியமானது ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதாகும்.

புலம்பெயர்ந்து சென்ற நிலையிலும் தமது உறவுகளுக்கு உதவ நினைத்து இங்குவந்து இந்த உதவிகளை வழங்கியுள்ளதானது அவரின் பெருந்தன்மையினை வெளிக்காட்டுக்கின்றது.

தமிழ் மக்கள் கடந்த கால யுத்தம் காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.இருந்தபோதிலும் யுதத்தினால் நேரடியாக பாதிககப்பட்ட பகுதியை நோக்கியே பார்வைகள் இருக்கின்றது.அந்த வலி நகர்ப்புறங்களில் இல்லையென்ற நிலையே உள்ளது.

இங்கு வாழ்பவர்கள் யுத்தப்பகுதிகளில் இருந்து உடமைகளை இழந்து உயர்களை பாதுகாப்பதற்காக இப்பகுதிக்கு வந்தவர்களே அதிகம்.உறவுகளை இழந்த சிறுவர்கள் பலர் இன்று மட்டக்களப்ப நகரில் உள்ள இல்லங்களில் உள்ளனர்.

வலியையும் வேதனையும் சுமந்த மக்கள் இங்கும் வாழ்கின்றனர்.புலம்பெயர் உறவுகள் உதவும்போது இப்பகுதியையும் நோக்கவேண்டும் என்றார்.