மட்டக்களப்பு இந்துகல்லூரி மைதானத்தில் புத்தாண்டு சந்தை ஆரம்பித்துவைப்பு

சித்திரைப்புத்தாண்டில் பொதுமக்கள் சிறந்த பொருட்களை கொள்வனவுசெய்யவும் மாபெரும் புத்தாண்டு சந்தை மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு,இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 5.00மணியளவில் இந்த சந்தை திறந்துவைக்கப்பட்டது.

வை.எம்.சி.ஏ.யும் சேவ்த சில்ரன்  அமைப்பும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் இந்த மாபெரும் சந்தையினை திறந்துவைத்தது.

வை.எம்.சி.ஏ.யின் தலைவர் டி.செகராஜசிங்கம் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் சேவ்த சில்ரன் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி வில்லியம் லீங்ஸ்,மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற பெண் முயற்சியாளர்களை வலுவூட்டும் முகமாகவும் பெண் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களது உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் இந்த சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் மக்கள் சிறந்த பொருட்களை கொள்வனவும் செய்யும் வகையிலும் இந்த சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் பால் உற்பத்தி பொருட்கள்,கிராமிய பாரம்பரிய உணவுகள்,பனை மற்றும் பன் உற்பத்தி பொருட்கள்,இயற்கை பசளைகளை பாவித்து உற்பத்திசெய்த பழங்கள்,மரக்கறி வகைகள் உட்பட பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த சந்தையானது பிற்பகல் 3.00மணி தொடக்கம் இரவு 9.00மணி வரை நடைபெறவுள்ளது.