திங்கட்கிழமை அவசரமாக கூடுகிறது கிழக்கு மாகாணசபை

கிழக்கு மாகாண சபை  மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேடமாக கூடவிருக்கின்றது.


சபையின் புதிய தவிசாளரை தெரிவு  செய்வதற்காகவே இந்த விசேட அமர்வு நடைபெறவுள்ளதாக  பேரவையின் செயலாளரால் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த 10ம் திகதி கூடிய கிழக்கு மாகாண சபை  அமர்வின் போது தவிசாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி  எதிர்வரும் 24ம் திகதி தான் சபை கூட வேண்டும்

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தொடரும் நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி சபையை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.

சபையின் பதில் தவிசாளர் பதவியிலுள்ள போதிலும் ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷேட அமர்வை   ஆளும் தரப்பில்  அதிருப்தியடைந்து எதிரணியாக  செயல்பட தீர்மானித்துள்ள  உறுப்பினர்கள் புறக்கணிப்பார்கள் என அந் அணியை சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள்  மாகாண அமைச்சருமான எம். எஸ் உதுமான்லெப்பை  கூறுகின்றார்..

 சபையின் தவிசாளராக பதவி வகித்த ஆரியவதி கலப்பதி தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் மாகாண காணி இ வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளதையடுத்து  தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து கொண்டார்.

புதிய தவிசாளரை நியமனம் செய்வதற்கு மாகாண சபையை கூட்டுவது தொடர்பாக அமைச்சர்கள் வாரியம் கூடி ஆராய்நது ஆளுநரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை சபை கூட்டுமாறு ஆளுநரால் பேரவை செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேரவையின் செயலாளர் எம். சீ. எம்  ஷெரீப்பினால் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல்  மாகாண சபை உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளதை உறுப்பினரான பிரசன்னா இந்திரகுமார் உறுதிப்படுத்தினார்.

இதே வேளை  கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிய தவிசாளர் பதவிக்கு ஐ. தே. கட்சி றுப்பினரான  சந்திரதாஸ கலப்பதியின் பெயர் முன்மொழியப்படவுள்ளதாக ஆளும் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.