சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான முதல் சிறுகதை தொகுப்பு மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது

மட்டக்களப்பின் பெண் எழுத்தாளர் இந்திராணி புஸ்பராசாவின் குயில் குஞ்சுகள் சிறுகதை அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி,உப்போடை சாரதா பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார திணைக்களத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன் தலைமை வகித்தார்.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நூலாகவும் சிறுகதை வரலாற்றில் சிறுவர் துஸ்பிரயோகத்தினை அடிப்படையாககொண்ட சிறுகதை தொகுப்பாகவும் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும் கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபருமான இந்திராணி புஸ்பராசாவின் படைப்பாக இந்த நூல் உருப்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை இராமகிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டதுடன் பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் க.பிரேமகுமார் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக பேராசிரியர் மா.செல்வராசாவும் கலந்துகொண்டார்.

நிகழ்வில் நூல் வெளியீட்டை தொடர்ந்து விமர்சன உரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் செ.யோகராசா நிகழ்த்தியதுடன் பதிலுரையினை நூலாசிரியர் இந்திராணி புஸ்பராசா நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும்,எழுத்தாளர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.