மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில் அரச கணக்காளர் சேவைச் சங்கம் கண்டனம்

இலங்கை கணக்காளர் சேவையை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையாற்றும் ரி..தேவகாந்தன் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியமைக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் வெளியிட:டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 
இலங்கை கணக்காளர் சேவையை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளராக கடமையாற்றும் ரி..தேவகாந்தன் வீட்டிற்கு 08.02.2015 (ஞாயிற்றுக்கிழமை ) மாலை 06.30 மணியளவில் கணக்காய்வாளரை தேடிச்சென்ற இனந்தெரியாத குழுவினரால் கணக்காய்வாளரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான அநாகரிகமான சம்பவத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட அரச கணக்காளர் சேவைச் சங்கம் தனது வன்மையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்வதோடு இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கொதிராக சட்ட நடவடிக்கையை மிக விரைவாக முன்னெடுக்குமாறு உரிய தரப்பினரை கேட்டுக்கொள்கின்றது.

குறித்த இனந்தெரியாத நபர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.