மட்டு.புதூரில் மதுபானசாலை கொள்ளையுடன் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது –பொருட்களும் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதுநகரில், தனியாருக்குச் சொந்தமான மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டது தொடர்பில் இருவரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பொருட்களும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


வெள்ளிக்கிழமை(20) புதுநகர் வவுணதீவு – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள மதுபான சாலையிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனது மதுச்சாலையில் விற்பனைக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பியர் குடிபானம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் மோப்பநாய்கள் அடையாளம் காட்டிய வீடுகளில் இருந்து இருவரை பொலிஸார் கைதுசெய்ததுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இவர்களிடம் இருந்து மதுபான போத்தல்கள் மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் 15வயதையுடையவர் எனவும் மற்றவர் 17வயதினையுடைவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இவர்கள் வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.