நிரந்தர தீர்வினை புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும் -சீ.யோகேஸ்வரன் பா.உ.

நிலைத்திருக்க கூடிய ஒரு அதிகார பரவலாக்கலின் கீழ் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வினை புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்.அவை மறுக்கப்படும் பட்சத்தில் அதனைப்பெறுவதற்கு தேவையான வழியை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.;யோகேஸ்வரன் தெரிவித்தார்.


பெரியபோரதீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல்வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் 1901ஆம் ஆண்டில் 23 வீதமான இந்துக்கள் இருந்தனர்.இன்று 12.6வீதமாக இந்துக்கள் உள்ளனர்.இந்துக்கள் இவ்வாறு குறைந்து சென்ற காரணங்கள் சமூகத்துக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும்.இதற்கு காரணம் இந்த நாட்டில் நாங்கள் திட்டமிட்ட வகையில் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு,அழிக்கப்பட்டமையே காரணமாகும்.

இந்த நாட்டில் பெருமளவான மலையக மக்கள் பெரும்பான்மையின அரசாங்கங்களினால் குடியுரிமை மறுக்கப்பட்டதனால் இந்த நாட்டில் இருந்துவெளியேறவேண்டிய நிலையேற்பட்டது.அவ்வாறு இருந்து ஆறு வீதமானவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தனர்.அங்கிருந்த துரை வர்க்கத்தினரை பயன்படுத்தி குடும்ப கட்டுப்பாடுகளை மேற்கொண்டு சனத்தொகையினை குறைப்பதற்கு நடவடிக்கையெடுத்தனர்.

இதன்காரணமாக தமிழர்களின் வீதம் வீழ்ச்சியடைந்தது.
எனவே எமது சமூகம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளது.தமிழன் என்றால் அவன் சைவனாகவே கருதப்படுவான்.வேறு யாரும் தமிழர் என்று உரிமைபாராட்டமுடியாது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிடம் இங்கு பெருமளவில் இந்துக்கள் அழிக்கப்பட்டதை அவர்களின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது அவர்கள் சிங்களவர்களும் இந்துக்கள் என்ற கருத்தினைக்கொண்டிருந்தனர்.இந்துக்கள் என்றால் ஆரியர்கள் என்ற வகையில் அவர்கள் நோக்கினார்கள்.தமிழர்கள் சைவர்கள் என்று நோக்கினார்கள்.இலங்கையில் அழிந்தவர்கள் சைவர்கள் அவர்கள் தமிழர்கள் என்று நோக்கினார்கள்.இதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்புகள் எங்கள் நாட்டில் நடந்த துன்பியல் நிகழ்வுகளுக்கு குரல்கொடுக்க மறுத்தன.பின்வாங்கியது.தமிழன் என்பது சைவன் என்பதை காட்டி நிற்கின்றது.

சைவமும் தமிழும் ஒன்று என்பதன் காரணமாகவே என்னைப்போன்றவர்களும் அரசியலுக்கு பின்னால் போகவேண்டிய நிலையேற்பட்டது.தமிழை காப்பாற்றினால் தான் எமது சமயத்தினை காப்பாற்றமுடியும்.இங்கு வெளியிட்டுள்ள நூலில் எமது பூர்வீக வரலாறுகள் குவிந்துள்ளன.

இந்த நாட்டில் கண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முக்கியத்துவம் பெற்றது.இங்குதான் பெரும்படைகள் தரித்து நின்றதாக வரலாறுகள் கூறுகின்றன.

எமது வரலாறுகளை நாங்கள் அறியவேண்டும்.இந்த நாட்டில் நாங்கள் உயர்ந்த வீர பரம்பரையாக இருந்தவர்கள்.எமது மாவட்டம் வீரர்கள் நிரம்பிய மாவட்டமாக இருந்துள்ளதை எமது வரலாறுகள் எடுத்துக்காட்டி நிற்கின்றன.
பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் அண்மையில் வெல்லாவெளியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.தமிழ் பிராமிய எழுத்துக்களைக்கொண்டுள்ளது.

இன்று தொல்பொருள் திணைக்களத்திலே 150க்கும் மேற்பட்ட தமிழ் பிராமிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வாசிக்கப்படாமல் உள்ளன.அவை வாசிக்கப்படுமாக இருந்தால் இந்த நாட்டின் உரிமையாளர்கள் தமிழர்கள் என்பது வெளிப்படும்.இதனால்தான் எங்கள் கல்வெட்டுகளை கூட அவர்கள் ஒதுக்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஆலயங்கள் ஆலய வரலாற்றினை மட்டும் வரலாறுகளாக வெளியிடாது சமுதாயம் சார்ந்த,தமிழினம் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்வது அத்தியாவசியமானது.

தமிழ் மக்களுக்கு நீதியானதும் நிலைத்து நிற்ககூடியதுமான ஒரு தீர்வுத்திட்டத்தினையே நாங்கள் இன்று எதிர்பார்த்துள்ளோம்.அதனால்தான் நாங்கள் அமைச்சு பதவிகளைக்கூட ஏற்கமறுத்தோம்.மிக குறுகிய காலத்தில் அதனை ஏற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை.

நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம்.1965ஆம் ஆண்டு அப்போது இருந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சு பதவிகளை தமிழரசுக்கட்சி பெற்றது.ஆனால் அன்று அமைச்சு பதவிகளை வழங்கி எங்கள் கோரிக்கைகள் மழுங்கடிக்கப்பட்டன.அதனால் அதில் இருந்து வெளியேறினார்கள்.

அதேபோன்று இன்றும் புதிய அரசாங்கத்துக்கு வடக்கு கிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்கி வெற்றியடைய செய்துள்ளோம். நிலைத்திருக்க கூடிய ஒரு அதிகார பரவலாக்கலின் கீழ் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வினை புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும்.அவை மறுக்கப்படும் பட்சத்தில் அதனைப்பெறுவதற்கு தேவையான வழியை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளும்.
இத்தனைகாலம் எமது மக்கள் அனுபவித்த துன்ப,துயரங்களுக்கு ஒரு நியாயமான தீர்வுவேண்டும்.அற்பசொற்ப சலுகைகளைப்பெற்றுக்கொள்ள நாங்கள் தயாரகயில்லை.எங்கள் மக்களைவ pற்று சுகபோகம் அனுபவிக்க நாங்கள் தயாராகயில்லை.

அதனால்தான் நாங்கள் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தோம்.வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.எங்களது பாதையில் சென்று எமதுமக்களுக்கான தீர்வினைப்பெற்றுகொடுப்பதில் நாங்கள் என்றும் முன்னிற்போம்.