ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்து கிழக்கு மாகாணசபை ஒத்திவைக்கப்படும் சாத்தியம் -இரா.துரைரெட்னம்

கிழக்கு மாகாணசபையின் நாளை நடைபெறவுள்ள அமர்வு ஒத்திவைக்கப்பட்டு ஆட்சிமாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.


நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபையின் அமர்வு தொடர்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இது தொடர்;பில் இரா.துரைரெட்னத்திடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாளை காலை கிழக்கு மாகாணசபையின் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் அமர்வினை ஒத்திவைக்ககூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

வரவு-செலவுத்திட்டத்தின் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த சபையில் ஆட்சி மாற்றம் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்திற்குள் தங்களை இணைத்துக்கொள்ளுமானால் மாகாணத்தில் வீதாசாரத்தில் 40வீதமுள்ள தமிழர்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆறு ஆசனங்களை கைப்பற்றிய மாவட்டத்துக்கே வழங்கப்படவேண்டும்.ஆளுனர் நியமனம்,சபாநாயகர்,உதவி சபாநாயகர்,ஐந்து அமைச்சர்கள் தெரிவு விடயத்தில் ஆளுந்தரப்பில் பங்குபற்றும் கட்சிகள் கூட்டுச்சேர்ந்து கலந்துரையாடி மூன்று இனங்களும் ஐக்கியமாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.

இந்த மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதைணந்துகொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாக்களித்த மக்களின் கோரிக்கையினை நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.