மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (02.01.2015) முச்சக்கர வண்டிக்கு இனம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்ட தேர்தல் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கருங்காலிச்சோலை பேத்தாழையில் வசிக்கும் செ.ஈவேரா என்பவரது வீட்டிக்கு நள்ளிரவு 1.00 மணியளவில் வந்த இனம் தெரியாதவர்கள் வீட்டின் முன் அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்சக்கரவண்டிக்கு தீ வைத்துவிட்டு ஓடி தப்;பியுள்ளதாகவும் இதானல் வண்டி முற்றாக எரிந்து நாசமாக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வீட்டில் உள்ளோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தீயானது வீட்டின் கூரைப்பகுதிக்கு பரவியபோது அயலவர்கள் கன்னுற்று கூச்சலிட்டு வீட்டின் உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி காப்பாற்றியதுடன் தீயானது மேலும் பரவாமல் தடுத்துள்ளனர்.
இதனால் உயிர் ஆபத்தோ உடல் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் மேலும் கூறினர். இதேவேளை பாதிப்பிற்குள்ளான செ.ஈவேரா தெரிவிக்கையில் தாம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஆதரவு தெரிவித்து செயற்படுவதாக சந்தேகம் தெரிவித்து பிள்ளையான் குழுவினரினால்; தமக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவினரினால் தமக்கு கடந்த சில காலமாக மறைமுக அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் இவர்களே தமக்கு இவ் ஈனச் செயலை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு தமது உயிருக்கு பாதுகாப்பு வழங்கும்படி தெரிவித்து மேற்படி குழுவினரிடமே தமக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்து கல்குடாபொலிஸ் நிலையதில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற கல்குடா தொகுதியின் ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் நிலைமைகளை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டதுடன் இவ்வாறான செயல்கள் யார் செய்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் தண்டிக்கப்படவேண்டும் என்று தெரிவித்து இது தொடர்பாக தமது கட்சியின் உயர் அதிகாரிகளுடன் உரியநடவடிக்கை எடுக்குமாறு வேண்கோள் விடுத்துள்ளார்.







