மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டியினால் மோதப்பட்ட நிலையில் அதில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர்.
கல்லடியில் இருந்து மகிழூருக்கு சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் முச்சக்கர வண்டி தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேபோன்று களுதாவளையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று குருக்கள்மடம் வளைவில் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் வீதி சமிக்ஞையில் மோதியதன் காரணமாக முச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேநேரம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகமாக வந்த முச்சக்கர வண்டி முன்னால் சென்ற கன்டரில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.