மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதிதேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட செயலக முறைப்பாட்டு பிரிவுக்கு 44 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கும் சென்று இந்த பிரிவுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் செயற்பாடுகளின்போது இடம்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பாளர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
தேர்தல் செயற்பாடுகளின் காரணமாக 44 முறைப்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அதிகமான முறைப்பாடுகள் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இருந்து 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து 08 முறைப்பாடுகளும், மட்டக்களப்பில் 09முறைப்பாடுகளும்,வாகரையில் மூன்று முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.