இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்க தலைவருக்கு மகத்தான வரவேற்பு மற்றும்; கௌரவிப்பு நிகழ்வு

அரச வங்கிகளில் கடமையாற்றிவரும் ஓய்வூதியத்திற்கு உள்வாங்கப்பட்டாதவர்களுக்கு நவம்பர் 24ஆம் திகதி முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு வங்கி ஊழியர்கள் இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கம் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்க தலைவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை கல்லடியில் நடைபெற்றது.

இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சர்வேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஏ.கே.பண்டார பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனநாயக்க,மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் வலித்து,பிராந்திய பிரதி முகாமைளாயர் ரவீந்திரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் கல்லடிப்பாலத்தில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வங்கி ஊழியர்களினால் அழைத்துவரப்பட்டனர்.
இலங்கையில் செயற்பட்டுவரும் அரச வங்கிகளான இலங்கை வங்கி,மக்கள் வங்கி,தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் ஊழியர்களை ஒன்றிணைத்ததாக இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கம் நாடெங்கிலும் செயற்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் கடந்த 18வருடமாக ஓய்வூதிய கொடுப்பனவுக்குள் உள்வாங்கப்படாமல் நாடெங்கிலும் உள்ள அரச வங்கிகளில் எட்டாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கடமையாற்றிவந்தனர்.

இது தொடர்பில் அண்மையில் இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஏ.கே.பண்டார மற்றும் மக்கள் வங்கி தலைவர் காமின் செனவிரட்ன ஆகியோர் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்தித்து ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தொடக்கம் ஓய்வூதிய கொடுப்பனவுக்குள் உள்வாங்கப்படாத ஊழியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையினை மேற்கொண்ட இலங்கை வங்கியாளர்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஏ.கே.பண்டார இதன்போது வங்கி ஊழியர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.