சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு நாவலடியிலுள்ள இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கலும் பழைய மாணவர்களுக்கான சங்கத்தினை உருவாக்குதலுக்குமான நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.


நாவலடியிலுள்ள சமுத்திரப் பல்கலைக்கழக கடற்தொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் கல்லூரியில் உதவிப் பணிப்பாளர் ரி.சுபராஜன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில், பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எப்.எம். ஹென்றி கெஸ், பிரதிப் பணிப்பாளர் ரசிந்த துசார, போதனாசிரியர் கே.பாலச்சந்திரன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் வி.ஜீவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், மாணவர்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், பணிப்பாளர் நாயகத்தினால் அவற்றினை நிவர்த்தி செய்யும் வகையில் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இன்றைய தினம், கடலக இயந்திரப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, கடலக வரைபு வாசிப்பும் தொலைத் தொடர்பும், உள்ளிட்ட பயிற்சிகளை நிறைவு செய்த 15 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன்.

மட்டக்களப்பு நாவலடியிலுள்ள சமுத்திரப் பல்கலைக்கழக கடற்தொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் கல்லூரியில் தற்போது கடற்தள அதிகாரி(டென் ஒப்பிசர்), இயந்திரத் தொழில் நுட்பவியல், உள்ளிட்ட கற்கைகளை 60 வரையானோர் கற்று வருகின்றனர்.

எதிர்வரும் வருடத்தில், வெளியிணை இயந்திரம் பழுது பார்த்தல், கடலக இயந்திரவியல் தொழில்நுட்பம், கடற்தொழில் தொழில்நுட்பம், வெல்டிங் (சமுத்திர) தொழில்நுட்பம், ஸ்குவா சுழியோட்டம், உயிர் காப்பு பாடநெறி, நீச்சல், கடல் வரைபடம் வாசித்தல், தொடர்பாடல் மற்றும் சட்லைட் இயக்குதல், கடற்தொழில் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட சான்றிதழ் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், டெக் அலுவலர், வைபர் கிளாஸ் தொழில் நுட்பம், நீர் வாழ் உயிரினச் செய்கை மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட டிப்ளோமா கற்கைகளும் நடைபெறவுள்ளதாக உதவிப் பணிப்பாளர் ரி.சுபராஜன் தெரிவித்தார்.