விமானப்படை முகாமுக்கு முன்பாக வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.


மட்டக்களப்பு விமானப்படை நிலையத்துக்கு செல்லும் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட இளைஞனின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை விமானப்படை நிலையத்துக்கு முன்பாகவுள்ள ஆற்றுப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலான வீதி ஆற்றின்குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.கடும் மழை காரணமாக வீதியனை மேவியதாக நீரோட்டம் காணப்படுகின்றது.

நேற்று மாலை மட்டக்களப்பு வீச்சுக்கல்முனையை சேர்ந்த இளைஞன் குறித்த வீதியை துவிச்சக்கர வண்டியில் கடக்கமுற்பட்டபோது பாதணி கழன்றபோது அதனை எடுக்கமுனைந்த நிலையில் நீரினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

நேற்று மாலை தொடக்கம் இவரது சடலம் தேடப்பட்டுவந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை மிதந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு வீச்சுகல்முனையை சேர்ந்த ஞானப்பிரகாசம் வினோதன் (24வயது) என்பவர் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.