மட்டக்களப்பில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் விசேட சுகாதார நடவடிக்கைகள்

வெள்ள அனர்த்தம் பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளில் சுகாதார பிரிவுகளினால் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட வாகரையில் உள்ள முகாம்களில் சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தலைமையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாகரை பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முகாம்களில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது முகாம்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் வயோதிபர்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

36 வாரங்களைக்கொண்ட கர்ப்பிணிப்பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாகரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அத்துடன்  65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் உடல் நிலைகளைப்பொறுத்து வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

அத்துடன் முகாம்களில் உள்ள குடிநீர்கள் மற்றும் மலசல கூடங்களில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் எதுவித தொற்று நோய்களோ,வேறு நோய்களோ ஏற்படவில்லையெனவும் வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.