முனைத்தீவில் விவசாய உபகரணம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வறிய விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் முனைத்தீவு சக்தி வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன்,ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,மக்கள் தொடர்பு அதிகாரி பேரின்பமலர் மனோகரதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெரியபோரதீவு,கோவில்போரதீவு,முனைத்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள 25 விவசாயிகளுக்கு தலா 25ஆயிரம் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள் மற்றும் முட்கம்பிகள் வழங்கிவைக்கப்பட்டன.திவிநெகும திணைக்களத்தின் ஊடாக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கான மேலதிக கொடுப்பனவான 10ஆயிரம் ரூபா வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 2500 ரூபா இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி உதவி பெறும் சுமார் 1900 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்ட 47 இலட்சம் ரூபா நிதியும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் கடந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு அமைவாக இந்த நிதி வழங்கிவைக்கப்பட்டது.

பெரும்பான்மையான மக்கள் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கே வாக்களிப்பர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இங்கு தெரிவித்தார்.