எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
எதிரணியில் உள்ள இனத்துவேச கட்சிகளின் கூட்டணியினால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சன்குளத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,மக்கள் தொடர்பாளர் பேரின்பமலர் மனோகரதாஸ்,வாழைச்சேனை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் ஜீவதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 1,000 குடும்பங்களுக்கு நுளம்புவலைகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் வழங்கவைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவிருந்து மழை பெய்வதால், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், இங்கு டெங்கு நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகின்றது.
இதன்போது அம்பந்தாம்வெளி, கிருமிச்சை, மதுரங்குளம், குஞ்சங்குளம், 2ஆம் கட்டை, புளியங்கண்டடி ஆகிய கிராம அலுவலர் பிரிகளிலுள்ள குடும்பங்களுக்கு நுளம்புவலைகள் வழங்கிவைக்கப்பட்டன.