வெற்றிக்கு கைகோர்க்குமாறு மைத்திரி மட்டக்களப்பு மக்களை அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பும் கிழக்கு மாகாண மக்களும் எனது வெற்றிக்கு கைகோர்க்கவருமாறு இங்கு அழைப்பு விடுப்பதுடன் நான் வெற்றிபெற்றால் தமிழர்களுக்கான உரிமையினை வழங்க நடவடிக்கையெடுப்பேன் என ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.


மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற தேர்தல் பிரட்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் இருந்துகொண்டே உள்ளன.யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்தபின்னர் எதையும் மக்களுக்கு செய்வார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

2010ஆண்டு அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியியை மறந்துவிட்டார்.அவர் எந்த அமைச்சர்களின் கருத்தினையும் கருத்தில்கொள்ளாமல் அவரும் அவரது குடும்பமும் எடுக்கும் முடிவுகளையே தீர்மானமாக கொள்கின்றார்.பாராளுமன்றில் இருக்கும் அனைவரையும் பயமுறுத்தியே செயற்படவைக்கின்றார்.இங்கிருக்கும் அரசாங்க ஊழியர்கள் கூட ராஜபக்ஸ குடும்பம் சொல்வதுபோன்றே நடந்துகொள்ளவேண்டும் என கூறப்படுகின்றது.

பாதுகாப்பு துறையினைகூட தங்களுக்கு ஏற்றாற்போல் வழிநடத்துகின்றனர்.இங்கு கல்வியையும் சீரழித்துவிட்டனர்.நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவையே சிறையில் அடைத்துவிட்டனர்.இந்த நாட்டின் மக்களின் பசிபட்டிணியை நீக்க அவர் தவறிவிட்டார்.

இன்று மக்களுக்கு பொருட்களை ஜனாதிபதி விநியோகித்துவருகின்றார்.இது தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றும் நாடகம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.எங்களுடைய மக்கள் நல்லமுறையில் வாழவேண்டும் என்பதற்கான வழிவகைகளை நாங்கள் மேற்கொள்வோம்.புதிய அரசாங்கத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டுவருவோம் என இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 10வருடகாலத்தில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது.இவை எதுவித கணக்குகளிலும் காட்டப்படவில்லை.இவற்றுக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாத நிலையே உள்ளது.

மக்களது பணங்களைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் தனது பொக்கட்டில் போடுகிறார் மகிந்த. அரசாங்க ஊழியர்களையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் செய்வதுடன் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுகிறார்.

இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டுள்ளனர்.இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்தவேண்டும் என்று.

எனவே மட்டக்களப்பு மக்களே! நீங்கள் இப்படிப்பட்ட ஜனாதிபதியைக் காப்பாற்றப் போகிறீர்களா? அல்லத எமது நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்களா? சிந்தியுங்கள்.

எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றியே எனக்கு ஆதரவு வழங்கி எங்களது கட்சியில் வந்து சகல மக்களும் ஒன்று சேர்கிறார்கள்.

மேலும் நாங்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற எந்தக் கட்சியுடனுமே எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இனறியே எமக்கு  ஆதரவு வழங்குகின்றனர்.

ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நாங்கள் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை.

இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.

இன்னும் காலம் தாழ்த்தாமல் எனக்கு ஆதரவு வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் நான் உங்களுக்கு உரிமையினை,விடுதலையினை அளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.