தொழில் முயற்சியாளர்கள்,விவசாயிகளுக்கான தொழில்நுட்ப அறிமுக நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் மாற்றீடான தொழில்நுட்பட அறிவினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (02) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.


தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக விதாதாவள நிலையங்கள் இணைந்து இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் திறனை விருத்திசெய்யும் வகையில் தேசிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப திட்டத்தினை அறிமுகம் செய்யும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மண்முனை வடக்கு விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் வளர்மதி நிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.ஏ. அப்கர், காத்தான்குடி உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விவசாய நடவடிக்கைகள் மற்றும் வீட்டுத்திட்டத்தில் நவீன பிரயோகங்கள் மற்றும் உணவுபதனிடலில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சி நெறியில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.