வவுணதீவு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 10அடி உயரமான சரஸ்வதி சிலை திறந்துவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள வவுணதீவு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 10 அடி உயரமான கலைமகள் சிலை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (05) காலை சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.


வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் முதன்முறையாக இந்த கலைமகள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் த.கோபாலப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
இராம கிருஸ்ண மிசனின் மட்டக்களப்புக்கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தாஜீ மகாராஜ் ஆன்மீக அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தின் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜீ;.சிறிநேசன், உள்ளிட்ட வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

இன்று காலை நடைபெற்ற ஈச்சந்தீவு கண்ணகை அம்மன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ அருளானந்தம் குருக்களின் விசேட பூஜை வழிபாடுகளையடுத்து ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தாஜீ மகாராஜால் கலைமகள் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது, சிலை அமைக்கும் பணியில் முன்னின்று செயற்பட்ட பாடசாலையின் ஆசிரியர் ஏ.சீ.பிரான்சிஸ் மற்றும் சிலையை வடிவமைத்த மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த சிற்பி எஸ்.கோபிராஜ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.