மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழையால் பல பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து –முகத்துவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பின் குளங்கள் நிரம்பிவருவதுடன் மட்டக்களப்பு வாவியும் பெருகிவருகின்றது.

இதன் காரணமாக வாவியினை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுவருகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையம் வாவிக்கு அருகில் இருப்பதன் காரணமாக அவையும் மூழ்கும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக மக்கள் போக்குவரத்துகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகவேண்டியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று வெல்லாவெளி,ஏறாவூர்ப்பற்று ஆகிய பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்துகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் தடுக்கும் வகையில் வெள்ள நீரை கடலுக்குள் வெளியேற்றும் நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கடற் தொழில் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு நாவலடிப்பகுதியில் வாவிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் வெளியேற்றும் முகத்துவாரம் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்புரைக்கமைய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும் கடற் தொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் ஆகியோர் நாவலடிப்பகுதிக்கு சென்று அங்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் முகத்துவாரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற் தொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.