வெடிமருந்து கலவை வைத்திருந்தவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் வெடி மருந்து கலவையினை வைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து நான்கு கிலோ வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


திக்கோடை கல்குவாரி பகுதியில் வைத்து பழுகாமத்தினை சேர்ந்த மாணிக்கம் கதிர்காமம்(40வயது)என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகம் கலவை செய்யப்பட்ட சுமார் நான்கு கிலோ வெடி மருந்து இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் சட்ட விரோதமான முறையில் அவற்றை வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திக்கோடை பொலிஸ் காவலரணுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த வெடி பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.