போரதீவுப்பற்றில் திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.


போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்த ஆண்டு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்கு 27 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இதன் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 20 வறிய குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுவதற்கான உபகரணங்களும் நன்னீர் மீன்பிடி உபகரணங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கோடு பல்வேறு திட்டங்களை அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் இங்கு தெரிவித்தார்.