(கே.ஆர்.ஜெயஸ்ரீராம்)
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் இம் முறை 5ஆம் தர புலமைப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து வலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (30) வாழைச்சேனை இந்துக் கல்லூரி மண்டபத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் செ. ஸ்ரீகிருஷ்ணராஜா தலைமையில் நடைபெற்றது.
பிரத அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.
இதன்போது 105 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா.;இவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று கல்விக் கோட்டத்தில் 52 மாணவர்களும்,ஏறாவூர் பற்று செங்கலடி கல்விக் கோட்டத்தில் 50 மாணவர்களும் கோறளைப்பற்று வடக்கு வாகரையில் 03மாணவர்களும் என பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இம்முறை மேற்படி கல்விக்கோட்டத்தில் உள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் 29 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் வரலாற்றில் முதன்முறையாக மயிலங்கரைச்சை மலைமகள் வித்தியாலயத்தில் இருந்து ஒரு மாணவன் சித்திபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் வலயத்தில் அதி கூடிய 186 புள்ளிகளை பெற்று செங்கலடி விவேகானந்த வித்தியாலயத்தினைச் சேர்ந்த சுதாகரன் அனோஜன் என்ற மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன் மற்றும் மேற் குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களும் வலயத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.








