மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார பேரவையின் தீவிர முயற்சி காரணமாக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய விடயம் நடந்தேறியுள்ளது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார பேரவையின் தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியர் சி.மௌனகுருவும் கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் அழைப்பு அதிதிகளாக கதிர்காமத்தம்பி உடையார் வேலுப்பிள்ளை ஞாபகார்த்த நிதிய உறுப்பினர்களான இலண்டனை சேர்ந்த டாக்டர் பாலசுப்ரமணியம்,திருமதி சகுந்தலா பாலசுப்ரமணியம் மற்றம் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்(ஜனா),பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டு கலைஞர்களை கௌரவித்தனர்.
இதன்போது “மீன்பாடும் மெல்லிசை கானங்கள்” இறுவெட்டு அதிதிகளினால் வெளியிட்டுவைக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் இசைப்பயணத்தில் தனித்துவத்தினை வெளிப்படுத்திய மட்டுநகரின் மெல்லிசை முன்னோடிகளான ஜீவன் சகோதரர்கள் மற்றும் அவர்களின் குழுவினர் இங்கு பாராட்டு கௌரவிக்கப்பட்டனர்.
எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமானவற்றை கடந்த காலத்தில் எமது சமூகம் பாதுகாக்க தவறிவரும் வேளையில் இவ்வாறான நிகழ்வு அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் முன்னுதாரணமாக நோக்கப்படவேண்டும்.
எமது கலைஞர்களை கௌரவப்படுத்தாமல் வெளியில் உள்ளவர்களை அழைத்துவந்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து எமது கலைஞர்களை குறைத்து மதிப்பீடு செய்வோருக்கு இது ஒரு எடுத்துக்காட்டான நிகழ்வாகும்.
மட்டக்களப்பில் தமிழ் வளர்க்கப்போகின்றோம் என கூறிக்கொண்டு எமது பண்பாட்டை அளிக்க நினைப்பவர்களுக்கும் இன்றைய நிகழ்வு மனமாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கின்றோம்.