மட்டக்களப்பில் உள்ள இரு வனஜீவராசி அலுவலகத்துக்கு வாகனம் வழங்க அமைச்சர் உறுதி –பொன்.செல்வராசா எம்.பி.

(சுஜி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த புதிதாக திறக்கப்பட்ட இரு வனஜீவராசிகள் திணைக்கள பிரதேச அலுவலகங்களுக்கு வாகனங்கள் வழங்க வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.


யானைகளின் அட்டகாசம் படுவான்கரைப் பிரதேசத்தில் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப் படுத்தும் நோக்கொடு வெல்லாவெளி மற்றும் கிரானில் அண்மையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் முகாம்கள் புதிதாகத்  திறக்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் விஜயமுனி சொய்சாவின் தலைமையில்; இடம்பெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போது அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 30 வாகனங்கள் இறக்குமதி செய்யும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் அதில் இரு வாகனங்களை வழங்க உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் மட்டக்களப்பிற்கு எதுவும் கொடுக்கப்படவில்லை எனவும் வெல்லாவெளியில்  உள்ள முகாமிற்கு அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட ஒரு பழைய வாகனம் மட்டும் பாவிக்கப்படுகின்றது.புதிய முகாம்கள் திறக்கப்பட்டாலும் யானைகளால் மனித இழப்புக்கள், சொத்து இழப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏற்கனவே யானைகளின் தாக்கத்தினால் இறந்தவர்களுக்கும், சொத்து அழிப்புக்களுக்கும் இதுவரையில் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

புhதிக்கப்பட்ட பகுதிகளின் பிரதேச செயலாளர்களினால் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி 6 மாதங்கள் கடந்தும் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அத்தோடு முகாமில் ஆளணி பற்றாக் குறையும் உள்ளன.

2014 ஆம் அண்டு வரவு செலவு திட்ட உரையின்போது 100 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தலா ரூபா 10 மில்லியன் வீதம் பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  8 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான ரூபாய் 80 மில்லியன் இவ்வருடம் முடிய 2 மாதங்கள் உள்ள நிலையில் அரச அதிபருக்கு இன்னும் வந்து சேரவில்லை. இப்பணம் மட்டக்களப்பிற்கு வந்து சேருமா என்பதில் கேள்விக் குறியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

வன ஜீவராசிகள் பாதுபாப்பு அமைச்சர் பதிலளிக்ககையில்,

யானைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்படவர்களுக்குரிய இழப்பீடுகளின் கொடுப்பனவுகளை ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார். அத்தோடு 8 பிரதேச செயலாளர் பிரிவுக்குமான 80 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், உயர் மட்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.