மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாநகர பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோரி கிறிஸ்டினா மேரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள எல்லை வீதி பாலர் பாடசாலை,நாவற்குடா சுத்தானந்தா பாலர் பாடசாலை,புதூர் பாலர் பாடசாலை,இருதயபுரம் பாலர் பாடசாலை என்பன பங்குகொண்டன.
இதன்போது பல்வேறு விளையாட்டுப்போட்கள் நடைபெற்றதுடன் கண்கவர் உடற் பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றது.
சின்னஞ்சிறு சிட்டுக்களின் நளினமான விளையாட்டு நிகழ்வுகள் பார்வையாளர்களையும் அதிதிகளையும் வெகுவாக கவர்ந்தன.
இந்த விளையாட்டுப்போட்டியில் எல்லை வீதி பாலர் பாடசாலை இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் வரலாற்றில் முதன்முறையாக நான்கு பாலர் பாடசாலைகளையும் இணைத்து இவ்வாறான விளையாட்டு நிகழ்வினை பிரமாண்டமான முறையில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.